இந்தியா
பாஜக-விற்கு என்றுமே பயப்பட மாட்டேன்: ராகுல் காந்தி ஆவேசப் பேச்சு!

எனது வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்து வைத்தாலும், வயநாடு தொகுதி மக்களுடன் என்றும் நான் இருப்பேன் என ராகுல் காந்தி பேசியுள்ளார். எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு பிறகு, ராகுல் காந்தி வயநாடு சென்ற போது, அங்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
வயநாடு சென்ற ராகுல் காந்தி
அவதூறு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 2 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதன் காரணத்தால், ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சூரத் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ராகுல் கந்தி மேல் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு பின்னர், இன்று முதன்முறையாக ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு சென்றிருந்தார். தனது சகோதரியான பிரியங்கா காந்தியுடன், ராகுல் காந்தி இணைந்து பேரணியாக சென்று மக்களைச் சந்தித்து பேசினார.
வயநாடு தொகுதி மக்கள் ராகுல் காந்திக்கு உற்சாகமான வரவேற்பை அளித்தனர். பிறகு, வயநாட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினார் ராகுல் காந்தி. அப்போது, பாரதிய ஜனதா கட்சிக்கு ஒருபோதும் நான் பயப்பட மாட்டேன். எனக்கு எதிராக என்ன நடந்தாலும் நான் என்றும் நானாகவே இருப்பேன். வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டலும் சரி மக்களுக்காக என்றென்றும் போராடுவேன்.
நம் நாட்டில் பல பேர் சொந்த வீடு இல்லாமல் தவிக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். என்னை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் வயநாடு தொகுதி மக்களுடன் இருப்பேன் என ராகுல் காந்தி உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.