இந்தியா
உலக பணக்காரர் பட்டியல்.. டாப் 10ல் இருந்து வெளியேற்றப்பட்ட அதானி..!

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை உலகக் கோடீஸ்வரர் பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியாவின் தொழிலதிபர் கௌதம் அதானி இன்று 11வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான அதானி, முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளிவிட்டு ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரராக மாறினார் என்பதும் அது மட்டும் இன்றி உலக பணக்காரர் பட்டியலில் முன்னேறிக்கொண்டே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கட்டத்தில் உலக கோடீஸ்வரர்களில் இரண்டாவது இடத்தில் இருந்த அவர் அதன்பின் மூன்றாவது இடத்தில் கிட்டத்தட்ட நீண்ட காலமாக இருந்தார். இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஹண்டர்பார்க் நிறுவனம் அதானி நிறுவனம் குறித்து வெளியிட்ட அறிக்கையின் காரணமாக அதானி குழுமங்களின் பங்குகள் பயங்கரமாக சரிந்தன.
கடந்த வாரம் புதன்கிழமை சரிய தொடங்கிய அதானி நிறுவனங்களின் பங்குகள் இன்றுவரை உயரவில்லை என்பதும் தொடர்ந்து சரிந்து கொண்டே இருப்பதால் அவருடைய சொத்து மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி அதானி சொத்து மதிப்பு 8.4 பில்லியன் டாலர் உள்ளதால் அவர் ப்ளூம்பெர்க் பில்லியனர் பட்டியலில் 4வது இடத்திலிருந்து 11-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மூன்றே நாட்களில் அவர் 34 பில்லியன் டாலர் சொத்துக்களை இழந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் மோசடியான பரிவர்த்தனைகளில் ஈடுபட்டது என்றும் பங்கு விலை கையாளுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஹிண்டர்பர்க் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக பங்குச்சந்தையில் ஏற்பட்ட தாக்கம் மிகப்பெரிய அளவில் இருந்தது அதானி நிறுவனம் இதுகுறித்து விளக்கம் அளித்த போதிலும் அந்த விளக்கத்தை முதலீட்டாளர்கள் ஏற்கவில்லை என்பதால் தொடர்ச்சியாக நான்கு நாட்களாக அவரது நிறுவனங்களின் பங்குகள் சரிந்து கொண்டே வந்தது. இன்று காலை பங்குச் சந்தை ஆரம்பித்தவுடன் கூட அதானி நிறுவனங்களின் பங்குகள் எதிர்மறையான நிலையில் தான் வர்த்தகம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பங்கு வர்த்தகத்தில் அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 10% சரிந்தன, அதானி கிரீன் எனர்ஜி 9.60% சரிந்தது, அதானி டிரான்ஸ்மிஷன் 8.62% சரிந்தது, அதானி வில்மர் (5%), அதானி பவர் (4.98%), என்டிடிவி (4.98%) மற்றும் அதானி போர்ட்ஸ் (1.45%) சரிந்தன.
இதனால் அதானி உலக கோடீஸ்வரர் பட்டியலில் பில் கேட்ஸ், ஜெஃப் பெசோஸ் மற்றும் கூகுள் இணை நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் போன்ற பத்து கோடீஸ்வரர்களுக்குப் பின்னால் உள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி 12வது இடத்தில் உள்ளார்.