இந்தியா
ஜனவரி முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி மற்றும் பூஸ்டர்: பிரதமர் மோடி அறிவிப்பு!

ஜனவரி முதல் சிறுவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் அதே போல் பெரியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்துவரும் நிலையில் தற்போது தான் தடுப்பூசி போடப்பட்டதன் காரணமாக படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 18 வயதிற்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் 18 வயதுக்கு கீழானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அறிவுறுத்தி இருந்தனர். இதனையடுத்து நேற்று நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் மோடி 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் அவர்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
அதேபோல் 18 வயது மேலானவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கூடுதலாக பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது படிப்படியாக ஒமிக்ரான் அதிகரித்து வருகிறது என்பதும், இந்தியாவில் மொத்தம் 456 ஒமிக்ரான் வைரஸ் நோயாளிகள் இருக்கும் நிலையில் அதனை தடுப்பதற்காக பெரியவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசி இந்தியாவில் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் தவணை தடுப்பூசி 100% செலுத்தப்பட்டுள்ளதை அடுத்து அம்மாநில அரசுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி என அனைத்து மாநிலங்களிலும் 100% தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

















