இந்தியா
ஷாருக்கான் மனைவி கெளரிகான் மீது புகார்.. எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதால் பரபரப்பு..!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் மீது மும்பையை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ள நிலையில் காவல்துறையினர் இது குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஷாருக்கானின் மனைவி கௌரி கான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஃபேஷன் திறையில் செல்வாக்கு உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவர் என்பதும் ’கௌரி கான் டிசைன்ஸ்’ என்ற பெயரில் சொந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அவர் பல வணிகங்கள் மற்றும் தயாரிப்புகளுக்கு பிராண்ட் அம்பாசிடராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மும்பை சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஒருவர், ஷாருக்கானின் மனைவி கெளரிகான் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் 409 என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கௌரி கான் மீது புகார் அளித்தவரின் பெயர் ஜஸ்வந்த் ஷா என்றும் இவர் ஒரு தொழிலதிபர் என்றும் இவர் லக்னோவில் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதற்காக முன்பணமாக ரூபாய் 86 லட்சம் கொடுத்து இருந்தார் என்றும் ஆனால் அவருக்கு அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் பிளாட்டையும் வழங்காமல் பணத்தையும் திருப்பி அளிக்காமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்றும் அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
ஜஸ்வந்த் ஷா தான் வீடு பிளாட் வாங்குவதற்காக முன்பணம் கொடுத்த நிறுவனத்தின் பிராண்டு அம்பாசிடர் கௌரி கான் தான் என்றும் இந்த பிளாட்டை வாங்குவதற்கு அவர் விளம்பரப்படுத்தியதால் அதன் தாக்கத்தின் காரணமாக தான் நான் அங்கு பிளாட் வாங்க முடிவு செய்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லக்னோவின் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி பகுதியில் உள்ள துளசியானி கோல்ஃப் வியூவில் பிளாட் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஜஷ்வந்த் சிங், தனக்கு தர வேண்டிய பிளாட்டை, ரியல் எஸ்டேட் நிறுவனம் வேறொருவருக்கு குடியிருப்பை வழங்கியதாகவும், தனது பணத்தைக் கூட திருப்பித் தரவில்லை என்றும் அவர் தனது புகாரில் கூறியுள்ளார். மும்பை காவல்துறையில் அவர் அளித்த புகாரில் கட்டிடம் கட்டுபவர்கள் மற்றும் நிறுவனம் உள்ளிட்ட பிற பெயர்களும் அடங்கும்.
துளசியானி கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் டெவலப்மென்ட் லிமிடெட் தலைமை நிர்வாக இயக்குநர் அனில் குமார் துளசியானி மற்றும் அதன் இயக்குநர் மகேஷ் துளசியானி ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கௌரி கான் நிறுவனத்தை விளம்பரப்படுத்துவதைப் பார்த்ததாகவும், அதனால் தான் பிராண்டில் நம்பிக்கை வைத்ததாகவும் ஷா போலீசாரிடம் கூறினார்.
கௌரி அல்லது அவரது தரப்பினர் யாரும் இந்த புகாருக்கு இதுவரை பதிலளிக்கவில்லை. ஆனால் இதுகுறித்து பிராண்ட் அம்பாசிடரான கெளரிகான், சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.