இந்தியா
உபியில் மீண்டும் புல்டோசர் கலாச்சாரம்.. சாட்சியை கொலை செய்தவரின் வீடு தரைமட்டம்..!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அவ்வப்போது புல்டோசர் மூலம் வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது என்றும் இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநில எம்எல்ஏ ஒருவரின் கொலை வழக்கில் சாட்சியாக இருந்த ஒருவரை சுட்டு கொலை செய்த குடும்பத்தினர் வசித்த வீடு புல்டோசரால் இடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநில எம்எல்ஏ ராஜூபால் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்த வழக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்த உமேஷ் பால் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.
உமேஷ் கொலை வழக்கில் அதிக் அகமது மற்றும் அவரது மனைவி பர்வீன் மற்றும் அவர்களது இரண்டு மகன்கள் ஆகியோர் குற்றவாளிகளாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் ஒரு பக்கம் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென உள்ளூர் நிர்வாகம் அதிக் அகமது வீட்டை தரைமட்டம் ஆக்கியதாக தெரிகிறது. இது குறித்து உள்ளூர் நிர்வாகம் கூறியபோது அதிக் அகமது வீடு விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என்றும் அதனால் இடிக்கப்பட்டது என்றும் ஏற்கனவே உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு தேவையான அனைத்து செயல்முறைகளும் பின்பற்றப்பட்டன என்றும் தெரிவித்துள்ளனர்.
அது மட்டும் இன்றி அதிக் அகமது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் உள்ள இரண்டு சொகுசு வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தெரிகிறது. உமேஷ் கொலை செய்யப்பட்ட தினத்தில் அதிக் அகமது மற்றும் அவரது குழுவினரால் உமேஷ் மட்டுமின்றி காவல்துறை அதிகாரி ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் இன்னொரு காவல்துறை அதிகாரி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
அதிக் அகமது மற்றும் அவரது மனைவி, மகன்கள் என ஒன்பது பேர்கள் மீது இந்த கொலை வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதிக் அகமது வீட்டை உள்ளூர் நிர்வாகம் புல்டோசர் மூலம் தரைமட்டம் ஆக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.