இந்தியா
IRCTC மற்றும் HDFC இணைந்து வழங்கும் கிரெடிட் கார்டு.. என்னென்ன சலுகைகள்?

IRCTC அமைப்பு ஏற்கனவே ஒரு சில வங்கிகளுடன் இணைந்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டுகளை தந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது HDFC வங்கியுடன் இணைந்து புதிய கிரெடிட் கார்டை வழங்குவதாக அறிவித்துள்ளது. IRCTC மற்றும் HDFC இணைந்து வழங்கும் இந்த கிரெடிட் கார்டில் ஏராளமான நன்மைகள் வாடிக்கையாளர்களுக்கு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவை என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.
IRCTC டிக்கெட் இணையதளம் மற்றும் IRCTC ரெயில் கனெக்ட் ஆப் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளின் முன்பதிவுகளில் இந்த கிரெடிட் கார்டுகள் பிரத்யேக பலன்கள் மற்றும் அதிகபட்ச சேமிப்பை வாடிக்கையாளர்கள் பெறலாம்.
IRCTC – HDFC வங்கி கிரெடிட் கார்டு NPCI இன் ரூபே நெட்வொர்க்கில் வழங்கப்படுகிறது. IRCTC – HDFC கிரெடிட் கார்டுதாரர்கள் கவர்ச்சிகரமான போனஸ், முன்பதிவுகளில் தள்ளுபடிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் உள்ள பல எக்சிகியூட்டிவ் லவுஞ்ச்களுக்கான சலுகைகளை பெறலாம்.
IRCTC தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ரஜ்னி ஹசிஜா, இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் மிகப்பெரிய மற்றும் நம்பகமான வங்கிகளில் HDFC வங்கி உள்ளது. இந்த முயற்சிக்கு அவர்களுடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கோ-பிராண்டட் கார்டு, பெரும்பாலான முக்கிய ரயில் நிலையங்களில் புதிதாக திறக்கப்பட்ட அதிநவீன ஓய்வறைகளுக்கான பிரத்யேக சலுகைகளை வழங்குகிறது. கிரெடிட் கார்டு ஆன்லைன் பரிவர்த்தனைகளை நெறிப்படுத்த உதவுகிறது, அதே நேரத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த-இன்-கிளாஸ் நன்மைகளையும் அனுபவத்தையும் பெறலாம் என்று கூறினார்.
HDFC வங்கியின் பணம் செலுத்துதல், நுகர்வோர் நிதி, டிஜிட்டல் வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் குழுத் தலைவர் பராக் ராவ் கூறுகையில், IRCTC – HDFC வங்கி கிரெடிட் கார்டு நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இந்திய இரயில்வே நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று என்பதால் ரயில் பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்திலிருந்தே வாடிக்கையாளர் சிறந்த அனுபவத்தை பெறலாம் என்றும், IRCTC உடன் கூட்டு சேர்ந்த முதல் தனியார் துறை வங்கி என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’ என்றும் தெரிவித்தார்.