உலகம்
ஒரு முழு டீமையே பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஒரு இந்தியரின் சோகக்கதை..!

உலகின் பல முன்னணி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக பணி நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது மூன்றாவது பணி நீக்க நடவடிக்கையாக ஒரு முழு டீமையே பணி நீக்கம் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கூகுள், அமேசான் உள்பட பல உலகின் முன்னணி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக பணிநீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். பொருளாதார மந்த நிலை பணவீக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் பத்தாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.
இந்த நிலையில் தற்போது மேலும் சிலரை பணி நீக்கம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் ஆகியவற்றுக்கு தொடர்புடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மூத்த தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்த இந்திய தொழில்நுட்ப வல்லுநர் வந்தன் கௌஷிக் அவர்கள் இது குறித்து கூறிய போது, ‘நான் எனது சக பணியாளர்கள் பலரைப் போலவே பணிநீக்க நடவடிக்கைக்கு உள்ளாகி உள்ளேன். இந்த வாரம் எனக்கும் எனது குழுவினருக்கும் ஒரு மோசமான வாரமாக தொடங்கி உள்ளது. நான் மட்டுமின்றி எனது குழுவில் இருந்த அனைவருமே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே நான் பணி நீக்க நடவடிக்கையை எதிர்பார்த்து காத்திருந்ததால் இது எனக்கு ஆச்சரியமாக இல்லை என்றாலும் வருத்தமாக உள்ளது. நான் சில நாட்களாகவே புதிய வாய்ப்புக்கு தயாராக இருந்தேன் என்றாலும் பணி நீக்க நடவடிக்கை என்ற செய்தியை கேட்ட பிறகு என் மனம் மிகவும் கடினமாக இருந்தது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நான் 8 ஆண்டுகள் வேலை செய்த நிலையில் எனது நேரம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது.
பல சவாலான களங்களில் பணி புரியும் வாய்ப்பை நான் பெற்றேன், அந்த வாய்ப்பை நான் மிகவும் ரசித்து செய்தேன், தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையில் நான் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளேன். இந்த நிறுவனத்தின் ஒரு பகுதியாக இதுவரை இருந்ததற்கு நான் எனது நன்றியை வெளிப்படுத்திக் கொள்கிறேன். பணிநீக்க நடவடிக்கைக்கு பிறகு மற்ற தொழிலாளர்களைப் போலவே நானும் புதிய வேலையை தேட வேண்டிய நிலையில் உள்ளேன்.
வரவிருக்கும் நாட்களில் எனது அடுத்த கட்ட படிகளை தீர்மானிப்பதில் கவனம் செலுத்துவேன். ஒரு சில விஷயங்கள் தள்ளி போனதை நான் தற்போது முடிக்க முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 10,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போதும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 2 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.