உலகம்
சிலிகான் வங்கியை அடுத்து இன்னொரு அமெரிக்க வங்கியும் திவால்.. அமெரிக்க மக்கள் அதிர்ச்சி..!

அமெரிக்காவில் சிலிகான் வங்கி நஷ்டமானதை அடுத்து திவால் ஆனதாக தகவல் வெளியானவுடன் அமெரிக்க பங்குச்சந்தை ஆட்டம் கண்டது என்பதும் அதுமட்டுமின்றி இந்திய பங்குச்சந்தை உள்பட உலகம் முழுவதிலும் உள்ள பங்குச்சந்தைகளில் அதன் தாக்கம் இருந்தது என்பதையும் பார்த்தோம்.
இதனை அடுத்து பங்குச்சந்தையில் இருந்த முதலீட்டை எடுத்து தங்கத்தை முதலீட்டாளர்கள் வாங்க தொடங்கியதால் தங்கம் கிடு கிடு என உயரத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் வங்கியை அடுத்து தற்போது மேலும் ஒரு வங்கி திவால் ஆகி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களில் அமெரிக்காவின் இரண்டு வங்கிகள் திவால் ஆகி உள்ளதால் அந்த வங்கிகளில் டெபாசிட் செய்த பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் சிலிக்கான் வங்கியை அடுத்து தற்போது சிக்னேச்சர் வாங்கி திவால் ஆகி மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சிலிக்கான் வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டு இரண்டு நாள் கூட முடிவடையாத நிலையில் திடீரென இன்னொரு பெரிய வங்கியான சிக்னேச்சர் வங்கியும் திவால் ஆனதால் அதில் டெபாசிட் செய்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் அமெரிக்க பெடரல் வங்கி இந்த வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களின் பணம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
சிலிக்கான் வங்கியை போலவே சிக்னேச்சர் வங்கியையும் அமெரிக்க அரசின் பெடரல் டெபாசிட் அமைப்பு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இதனை அடுத்து வாடிக்கையாளர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகை கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சிக்னேச்சர் வங்கி தனக்கு கிடைத்த டெபாசிட்டின் பெரும் தொகையை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளதால் தான் அந்த வங்கி திவால் ஆனதாக கூறப்படுகிறது. கிரிப்டோ கரன்சியின்ப் மதிப்பு மிகப்பெரிய சரிவு ஏற்பட்டதை அடுத்து அந்த வங்கி திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் சிலிகான் வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி திவால் ஆகி உள்ள நிலையில் அமெரிக்க பொருளாதாரத்தை வலிமைப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.