தமிழ்நாடு
சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையத்தின் பாரபட்சம்: புலம்பும் எதிர்கட்சிகள்!

தேர்தலில் போட்டியிட அமமுக, விசிக, நாம் தமிழர் கட்சிகள் கேட்கும் சின்னங்களை ஒதுக்காமல் முரண்டு பிடிக்கும் தேர்தல் ஆணையம், பாஜக, அதிமுக உடன் கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அவர்கள் கேட்ட சைக்கிள் சின்னத்தை ஒதுக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக குக்கர் சின்னத்தை கேட்டு டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திடம் போராட்டமே நடத்தி வருகிறார். உச்ச நீதிமன்றத்தை தினகரன் நாடியுள்ள நிலையில் கடந்த 15-ஆம் தேதி விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து யாரும் ஆஜராகவில்லை. இதனையடுத்து இந்த வழக்கு வரும் 25-ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இரு வாரங்களில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தங்களுக்கு மோதிரம் சின்னத்தை ஒதுக்குமாறு விசிக தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் அளித்தது. ஆனால் அதனை விசிகவுக்கு அளிக்காமல் தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம். தொடர்ந்து வைரம் சின்னம் கேட்கப்பட்டது, ஆனால் அதுவும் விசிகவுக்கு ஒதுக்காமல் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மூன்றாவது பலாப்பழம் சின்னம் கேட்கப்பட்டது, அதையும் வேறு கட்சிக்கு ஒதுக்கியுள்ளனர். தொடர்ந்து டேபிள் சின்னத்தை கேட்டனர். அதையும் ஒதுக்காமல் தற்போது வேறு பட்டியலை அனுப்புங்கள் என தேர்தல் ஆணையம் கூறுவதாக தெரிவித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
இதனால் இதில் அரசியல் கட்சிகளின் தலையீடு இருப்பதாக சந்தேகிக்கிறார் திருமாவளவன். இந்நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தலில் போட்டியிட்ட இரட்டை மெழுகுவர்த்தை சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைத்தது. ஆனால் அதனை நிராகரித்த தேர்தல் ஆணையம் அவர் கேட்ட மாற்று சின்னமான மயில், காளை மாடு போன்றவற்றையும் நிராகரித்து கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதனால் சீமானும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இப்படி எதிர் கட்சிகளிடம் தனது அனுகுமுறையை காட்டி வரும் தேர்தல் ஆணையம் ஜி.கே.வாசனின் தமாக ஒரு தொகுதியில் போட்டியிட சைக்கிள் சின்னத்தை கேட்டதும் ஒதுக்கி உள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட உள்ள கட்சிக்கு கேட்ட சின்னத்தை ஒதுக்காமல் போக்கு காட்டி வரும் தேர்தல் ஆணையம் ஜி.கே.வாசனின் தமாக ஒரு தொகுதியில் போட்டியிட சைக்கிள் சின்னத்தை கேட்டதும் அதனை வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமாக, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கூட்டணியுடன் சேர்ந்து இந்த தேர்தலை சந்திக்கிறது. ஆளும் கட்சி என்பதால் தேர்தல் ஆணையம் அவர்களுக்கு சாதகமாகவும், எதிர் கட்சிகள் என்பதால் அவர்களுக்கு பாதகமாகவும் செயல்படுவதாக இதன்மூலம் பரவலாக பேசப்படுகிறது.



















