ஆரோக்கியம்
மீதமான இட்லியைக் கொண்டு சுவையான இட்லி மஞ்சூரியன் செய்முறை!

பெரும்பாலான தமிழக வீடுகளில் காலை உணவாக இட்லி மிகவும் பிரபலம். இட்லி சட்னி மற்றும் சாம்பாருடன் சாப்பிடுவது அன்றைய நாள் சிறப்பாக தொடங்கும். இட்லி ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு ஆகும். சில சமயங்களில் அதிகமான இட்லி செய்துவிடும், அப்போது அதை எவ்வாறு பயன்படுத்துவது என்ற சிக்கல் ஏற்படலாம்.
இட்லி மஞ்சூரியன் என்பது மீதமான இட்லியை வைத்து தயாரிக்கும் ஒரு சுவையான மற்றும் வறுத்த சைனீஸ் உணவு வகையாகும். இந்த உணவு, சைனீஸ் உணவகங்களில் பரிமாறப்படும் மஞ்சூரியனின் சுவையுடன் இருப்பதால், இட்லி lovers-ஐ கவரும் ஒரு நல்ல மாற்றாக உள்ளது.
தேவையான பொருட்கள்:
இட்லி – 10
பெரிய வெங்காயம் – 2
தக்காளி சாஸ் – 2 ஸ்பூன்
சோயா சாஸ் – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
வெங்காயத் தாள் – 5
இஞ்சி, பூண்டு விழுது – 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
கார்ன் ஃப்ளார் மாவு – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம் மற்றும் வெங்காயத் தாளை சிறிது நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
இட்லிகளை சின்ன சின்ன சதுரங்களாக நறுக்கி, நன்கு காய்ந்த எண்ணெயில் சிவக்க பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கிய பின்னர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
பச்சை வாசனை போனதும் தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்க்கவும்.
இவை நன்கு கொதித்ததும், பொரித்த இட்லிகளை சேர்க்கவும். கார்ன் ஃப்ளார் மாவை 1/4 டம்ளர் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.
கலவை நன்கு கெட்டியானதும், கொத்தமல்லி தழை மற்றும் வெங்காயத் தாள் சேர்த்து இறக்கவும்.
சூப்பரான இட்லி மஞ்சூரியன் ரெடி!
இது மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு அல்லது குடும்பத்தினருக்குக் கொடுக்க மிகவும் சிறந்த உணவாக இருக்கும். பன்னீர், காளான், காலி ஃபிளவர் போன்றவற்றையும் இந்த முறையில் மஞ்சூரியன் செய்யலாம்.




















