சினிமா செய்திகள்
அமிதாப், ரன்வீர்சிங், ஷாருக்கான், அஜய்தேவ்கான் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவு!

பாலிவுட் பிரபலங்களான அமிதாப், ரன்வீர்சிங், ஷாருக்கான், அஜய்தேவ்கான் ஆகிய 4 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய பீகார் மாநில நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
நடிகர்கள் நடிப்பதற்காக வாங்கிய சம்பளம் மட்டுமின்றி விளம்பரங்களிலும் அதிக அளவு நடித்து மிகப்பெரிய வருமானத்தை பெற்று வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்தவகையில் அமிதாப், ரன்வீர்சிங், ஷாருக்கான், அஜய்தேவ்கான் ஆகிய நால்வரும் புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா ஆகிய பொருட்களுக்கு விளம்பரம் செய்வதாக பீகார் மாநில நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
சமூக ஆர்வலர் தமன்னா ஹாஸ்மி என்பவர் தாக்கல் செய்த இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது குற்றம்சாட்டப்பட்ட நான்கு பாலிவுட் பிரமுகர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் கிடைக்கும் என்பதற்காக புகையிலை பொருட்கள் மற்றும் போதைப் பொருட்களுக்கு விளம்பரம் செய்யும் நடிகர்களுக்கு ஏற்கனவே கண்டனங்கள் குவிந்து வந்த நிலையில் தற்போது அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் புகையிலைப் பொருட்களுக்கு விளம்பரம் செய்ய மாட்டேன் என்று கூறிய நிலையில் அவரை மற்ற நடிகர்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.