சினிமா
ஏ.ஆர். ரஹ்மான்: “‘பத்து தல’ படம் நான் ஒத்துக்கொள்ள காரணம் இதுதான்!”

ஸ்டுடியோ கிரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் ‘பத்து தல’ திரைப்படம் இந்த மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையொட்டி இதன் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

Silambarasan TR in Pathu Thala Trailer Released
நிகழ்ச்சியில் படத்தின் ட்ரைய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது. மேடையில் படத்தின் பாடல்கள் குறித்தும் இதன் அனுபவம் பற்றியும் ரஹ்மான் பகிர்ந்து கொண்டதாவது, “‘பத்து துல’ படம் நான் ஒத்துக் கொண்டதற்கு முதல் காரணம் என் தம்பி சிலம்பரசன். அதன் பிறகு இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா. அவருக்கு மிகச் சிறந்த இசை அறிவு இருக்கிறது. என்னுடைய சினிமா பயணத்தில் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக ‘முன்பே வா என் அன்பே வா’ பாடலை குறிப்பிடுவேன். இப்பொழுது வரைக்கும் பாடல் வெளியாகி பல வருடங்கள் கடந்தும் அது பலருக்கும் பிடித்த பாடலாக இருக்கிறது.
முதலில் அந்த பாடலுக்கு இசையமைத்துவிட்டு, இது மிகவும் சோகமாக இருக்கிறது என்று இயக்குநரிடம் சொன்னேன். ஆனால், அது நிச்சயம் வெற்றியடையும் பொறுத்திருந்து பாருங்கள் என்று சொன்னார். அப்படியே நடந்தது. அதை சரியாக கணித்து அவர் என்னிடம் சொன்னார். அவருடைய பொறுமை, இசைமேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை என இது எல்லாமும் நான் இந்த படம் ஒத்துக் கொள்ள காரணங்கள். படத்தின் அனைத்து பாடல்களும் மாஸாக இருக்கும். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘அக்கரையில..’ பாடல் சிம்பு பாட வேண்டியது. ஆனால் அவர் அந்த சமயத்தில் தாய்லாந்துக்கு சென்று விட்டதால் இந்த பாடலை நான் பாடினேன். டி.ஆர். சார் இங்கு இருக்கிறார்.
அவர்தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இந்த தருணத்தில் இன்னொரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ‘சேவ் லைட்மேன் ஃபண்ட்’ என லைட்மேன்களுக்காக இணையதளம் ஒன்று ஆரம்பித்துள்ளோம். படத்திற்கு ஒளிபாய்ச்சுவது அவர்கள்தான். அவர்களுக்கு சரியான இன்ஷூரன்ஸ் இல்லாமல் இருக்கிறது. இந்த இணையதளத்தை சிம்பு லான்ச் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்’ என ரஹ்மான் வேண்டுகோளுக்கு இணங்க சிம்பு இந்த இணையதளத்தை அறிமுகப்படுத்தினார்.