இந்தியா
ராஜினாமா செய்கிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

மக்களவை தேர்தலுடன் ஆந்திராவில் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் ஆந்திர சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்குதேசம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தெலுங்க தேசம் கட்சிக்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஜெகன்மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 149 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. சந்திரபாபு நாயுடுவின் ஆளும் தெலுங்குதேசம் கட்சி 25 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது. சிரஞ்சீவியின் தம்பியான பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.
149 இடங்களில் முன்னிலையில் உள்ள ஜெகன்மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாலும், சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதாலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று மாலை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சந்திரபாபு நாயுடு தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





















