தமிழ்நாடு
மகன் செய்யும் தவறுகள்… கண்டிக்க வேண்டுமே தவிர நியாயப்படுத்தக்கூடாது: முதல்வர் ஸ்டாலின் மீது பாஜக காட்டம்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து பேசிய விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அவருக்கு ஆதரவு தெரிவித்தநிலையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அதனை விமர்சித்துள்ளார்.

#image_title
ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்எல்ஏக்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஐபிஎல் போட்டியை நடத்துபவர் உங்கள் நெருங்கிய நண்பர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா. அவரிடம் பேசி ஒரு எம்எல்ஏக்கு 5 டிக்கெட் வாங்கி குடுங்க என தெரிவித்தார்.
இதனையடுத்து அமித்ஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக குறிப்பிட்டவையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். பாஜகவின் இந்த கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு நிராகரித்தார். இதனை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அமித்ஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்த தவறும் இல்லை. அமித்ஷா பெயரை குறிப்பிட்டது என்ன தகாத வார்த்தையா? விமர்சனம், கேலி செய்தோ அமைச்சர் பேசவில்லை, திரு என்று சொல்லி தான் பேசியுள்ளார். அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. பேசியதில் தவறு இருந்திருந்தால் அவை குறிப்பில் இருந்து நானே நீக்க சொல்லிருப்பேன் என்றார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், உள்துறை அமைச்சர் மகன் நடத்தும் ஐபிஎல் போட்டியின் டிக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள் என கிண்டலாக பேசுகிறார். சபையில் உள்துறை அமைச்சரின் மகனை தேவையில்லாமல் இழுக்கிறார்கள். இதைக் கேட்டால், முதலமைச்சர் இதனை நியாயப்படுத்துகிறார். மகன் என்பதால் அவருக்கு மகன் செய்யும் தவறுகள் எல்லாம் தெரியவில்லை. தவறு செய்தால் கண்டிக்க வேண்டுமே தவிர நியாயப்படுத்தக்கூடாது என்று தெரிவித்தார்.