இந்தியா
பாஜக முன்னிலையை தொடர்ந்து மோடிக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து!

7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
மொத்தம் தேர்தல் நடைபெற்ற 542 தொகுதிகளில் பாஜக தலைமையிலான கூட்டணி 338 இடங்களில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. ஆட்சி அமைக்க 272 இடங்களில் வெற்றி பெற்றாலே போதுமானது ஆனால் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் இந்த எண்ணிக்கையை தாண்டி முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 92 இடங்களிலும் மற்ற கட்சிகள் 112 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அதாவது கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் கூட ஆட்சி அமைக்க கூடிய நிலையில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கும் நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துகள். தங்களோடு தொடர்ந்து நெருக்கமாக பயணித்திட ஆர்வமாக உள்ளோம் என கூறியுள்ளார். பாஜக தொடர்ந்து முன்னிலையில் இருப்பதையொட்டி உலக தலைவர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் வர தொடங்கியிருக்கின்றன.









