சினிமா
சிம்பு படத்தில் இணைகிறாரா கமல்ஹாசன்?

நடிகர் சிம்புவுடன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கிறாரா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு பிறகு ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருக்கும் ‘பத்து தல’ திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை அடுத்து சிம்புவின் 48வது படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படப் புகழ் தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது என்பது ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை அடுத்து, இந்தப் படத்தில் சிம்புவுடன் நடிகர் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் வர இருக்கிறாரா எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
ஏனெனில், ‘வெந்து தணிந்தது காடு’ பட இசை வெளியீட்டின் போது சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்பொழுது அவருடன் நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை சிம்பு தெரிவித்திருந்தார். அப்போதே, அவரது தயாரிப்பில் சிம்பு நடிக்க இருப்பதை கமலஹாசன் உறுதிப்படுத்தினார்.
இப்பொழுது அது அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டு விட்டது. எனவே, இந்த படத்தில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் வருவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம். நடிகர் கமல்ஹாசன் ‘விக்ரம்’ படத்தை அடுத்து தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் பிஸியாக இருக்கிறார். இதனை அடுத்து ஹெச். வினோத் இயக்கத்தில் படம் நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.