இந்தியா
முக்கிய ஆவணங்களை வெளியிட மோடிக்கு மல்லிகார்ஜுன் கார்கே பரபரப்பு கடிதம்!

முன்னாள் சிபிஐ தலைவர் அலோக் வர்மா பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தேசிய அரசியலில் இன்னமும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சிபிஐ தலைவர் அலோக் வர்மா பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கை மற்றும் ஜனவரி 10-ம் தேதி நடைபெற்ற தேர்வுக் குழு குறித்த தகவல்கள் போன்ற முக்கிய ஆவணங்களை வெளியிடுமாறு பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
மூன்று உறுப்பினர்களை கொண்ட தேர்வுக் குழுவில் பிரதமர் மோடி மற்றும் நீதிபதி ஏ.கே.சிக்ரியின் வாக்குகளால் அலோக் வர்மா சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதில் மல்லிகார்ஜுன் கார்கே எதிர்க்கட்சி தரப்பு பிரதிநிதியாக இருந்தார். அலோக் வர்மா நீக்கம் குறித்த ஆவணங்கள் வெளியிடப்பட்டால் பொதுமக்கள் அவர்கள் தரப்பு முடிவுக்கு வருவார்கள். சட்ட மற்றும் இயற்கை நீதியின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று தேர்வுக் குழு உறுப்பினர்களிடம் நான் எவ்வளவோ கூறியும், மத்திய கண்காணிப்புக் குழு அறிக்கையின் அடிப்படையில் முடிவெடுத்துவிட்டனர் என மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், சிபிஐக்கு இடைக்காலத் தலைவரை நியமித்தது சட்டவிரோதம். எந்தத் தாமதமுமின்றி உடனடியாக சிபிஐக்கு இயக்குநரை நியமிப்பதற்குத் தேர்வுக் குழுக் கூட்டத்தை உடனடியாக நடத்தும்படி அரசை வலியுறுத்தியுள்ளார்.







