சினிமா செய்திகள்
பிக்பாஸ் 5: மொத்தம் 18 போட்டியாளர்கள், அதில் 4 போட்டியாளர்கள் கன்ஃபர்ம்!

பிக்பாஸ் தமிழ் ஐந்தாவது சீசன் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கயிருக்கும் நிலையில் இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நான்கு போட்டியாளர்கள் குறித்த உறுதி செய்யப்பட்ட தகவலும் கசிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் சீசன் 5 இன்று கமல்ஹாசன் தொடங்கி வைக்கிறார் என்பதும் இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி 3 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை நடந்த 4 சீசன்களில் பதினைந்து அல்லது பதினாறு போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் இந்த சீசனில் 18 பேர் போட்டியிடுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அதில் நான்கு போட்டியாளர்கள் குறித்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி யூடியூப் விமர்சகர் அபிஷேக், ஜெர்மனியை சேர்ந்த பாடகர் மதுமிதா, டிவி சீரியல் நடிகர் ராஜ்மோகன், மற்றும் கானா பாடகி இசைவாணி ஆகிய நால்வர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளதாக விஜய் டிவி வட்டாரங்கள் கூறியுள்ளன.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் இருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த பல்வேறு விவரங்களை துல்லியமாக தெரிவித்துவரும் பயனாளி ஒருவரும் இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் என்ற நிலையில் மேற்கண்ட நான்கு போட்டியாளர்கள் தவிர மீதி உள்ள 14 போட்டியாளர்கள் யார் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கனி, சுனிதா, ஷகிலாவின் மகள் மிளா, யாஷிகாவின் நண்பர் நிரூபன், விஜய் டிவி தொகுப்பாளினிகள் ஜாக்லின் மற்றும் பிரியங்கா, திருநங்கை நமீதா, தொழிலதிபர் ரேணுகா ப்ரவின், மலேசியாவை சேர்ந்த நதியாசிங் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது என்பதும் இதில் எத்தனை பேர் இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.






