இந்தியா
உலகெங்கும் பரவும் புதிய வகை Super Flu வைரஸ் : நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

H3N2 subclade K என்று அழைக்கப்படும் இன்ப்ளூயன்ஸா A வைரஸின் புதிய உருமாறிய வகை, தற்போது உலகம் முழுவதும் அதிவேகமாகப் பரவி வருகிறது. வட அரைக்கோள நாடுகளில் இது ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவில் 2025–2026காய்ச்சல் காலம் மிகவும் தீவிரமாக இருக்கக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த ஆண்டிற்கான காய்ச்சல் தடுப்பூசிகள் இறுதி செய்யப்பட்ட பிறகு, ரோப்பாவில் இந்த subclade K கண்டறியப்பட்டது. இதில் உள்ள 7 முக்கிய மரபணு மாற்றங்கள், தற்போதைய தடுப்பூசிகளால் உருவாக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை ஓரளவு ஏமாற்றி உடலுக்குள் நுழையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஜப்பான் மற்றும் இங்கிலாந்தில் ஏற்கனவே இந்த வைரஸால் ஆரம்பகால மற்றும் கடுமையான காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது இது கனடா மற்றும் அமெரிக்காவின் பெரும்பாலான மாநிலங்களில் பரவி வருகிறது.
பொதுவாக H3N2 வகை வைரஸ்கள் கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. குறிப்பாக முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு இது அதிக பாதிப்பை உண்டாக்கலாம்.
தடுப்பூசி இந்த புதிய வைரஸிற்கு எதிராக முழுமையாகச் செயல்படாவிட்டாலும், நோய் தீவிரமடைவதைத் தடுக்கவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தைக் குறைக்கவும், உயிரிழப்பைத் தவிர்க்கவும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
இது சாதாரண இன்ஃப்ளூயன்ஸா A காய்ச்சலைப் போன்றே இருக்கும். இதன் அறிகுறிகள் கோவிட்-19 மற்றும் பிற சுவாசப் பாதை வைரஸ்களுடன் ஒத்துப்போவதால், முறையான மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் காட்டாமல் மருத்துவர்களை அணுகுவதும், கூட்டமான இடங்களைத் தவிர்ப்பதும் பாதுகாப்பானது.


















