தமிழ்நாடு
மோடியை எதிர்த்து வாரணாசியில் 111 விவசாயிகள் போட்டி: அய்யாக்கண்ணு அதிரடி!

பிரதமர் மோடி போட்டியிட உள்ள வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம், வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்ய கோரிக்கை, விவசாயிகள் தற்கொலை உள்ளிட்ட பல பிரச்சனைகளை முன்னிறுத்தி டெல்லியில் விவசாயிகளை ஒருங்கிணைத்து பல போராட்டங்களை நடத்தியவர் அய்யாக்கண்ணு. நாடு முழுவதையும் தனது நூதன போராட்டங்கள் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர். ஆனால் பிரதமர் மோடி மட்டும் இவர்களை வந்து பார்க்கவே இல்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் தஞ்சாவூரில் பேசிய அய்யாக்கண்ணு, பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறினார். தமிழகத்திலிருந்து 1100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாரணாசி செல்லவுள்ளதாகவும், 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




















