தொழில்நுட்பம்
Xiaomi YU7 எலக்ட்ரிக் கார்: அறிமுகத்தில் 3 லட்சம் ஆர்டர்! டெலிவரிக்கு 62 வாரங்கள் காத்திருக்க வேண்டுமாம்!

சீனாவின் புகழ்பெற்ற Xiaomi நிறுவனம் அறிமுகம் செய்துள்ள YU7 எலக்ட்ரிக் கார் 72 மணி நேரத்திலேயே 3 லட்சம் ஆர்டர்களைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக, தற்போது டெலிவரி காத்திருப்பது 62 வாரங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 26 அன்று சீனாவில் அறிமுகமாகிய YU7, ஜூலை 6ஆம் தேதி முதல் டெலிவரி தொடங்கியுள்ளது. 20,000 யுவான் முன்பணம் செலுத்தியவர்கள் முதன்முதலில் இந்த காரை பெற்றனர். முதற்கட்ட வாடிக்கையாளர்கள், உயர் செயல்திறன் விரும்பும் தொழில்நுட்ப வல்லுநர்கள், குடும்ப தேவைக்கான பயனர்கள் என இரு வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
YU7 காரின் பெரும் வரவேற்புக்கு காரணம், இதன் பிரீமியம் வடிவமைப்பும், ஸ்மார்ட் தொழில்நுட்ப வசதிகளும் தான். 4.99 மீட்டர் நீளம், 3 மீட்டர் வீல்பேஸ், ஐந்து இருக்கைகள், 16.1-இன்ச் தொடுதிரை, இரட்டை 80W வயர்லெஸ் சார்ஜிங், பனோரமிக் ஹைப்பர்விஷன் டிஸ்ப்ளே போன்ற வசதிகள் இதில் இடம்பிடித்துள்ளன.
பவர் விருப்பங்கள்:
பின்புற மோட்டாருடன் வரும் அடிப்படை மாடல்: 235 kW பவர், 528 Nm டார்க், ஒருமுறை சார்ஜ் செய்ய 830 கி.மீ. வரை பயணம்.
YU7 Pro: ஆல்-வீல் டிரைவ், இரட்டை மோட்டார், 365 kW பவர், ஒருமுறை சார்ஜ் 770 கி.மீ வரை செல்லும்.
Xiaomi-யின் மின்னணு சாதனங்களை தாண்டி, ஆட்டோமொபைல் துறையில் YU7 பெரும் வெற்றி அடைந்துள்ளது. தற்போது புதிய ஆர்டர் செய்யும் நபர்கள், குறைந்தது 45 வாரம் முதல் அதிகபட்சமாக 62 வாரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.




