தமிழ்நாடு
நடிகர் விஜய்யின் உறவினர் வீட்டில் திடீர் சோதனை: வருமான வரித்துறையினர் அதிரடி!

நடிகர் விஜய்யின் உறவினர் வீட்டில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜயின் உறவினரும் விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ என்பவரின் வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
பெங்களூரை சேர்ந்த செல்போன் தயாரிப்பு நிறுவனம் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கும் சேவியர் பிரிட்டோ நிறுவனம் ஏற்றுமதி-இறக்குமதி பணிகளை செய்து வருவதாகவும் நேற்று செல்போன் தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததை அடுத்து இன்று சேவியர் பிரிட்டோ நிறுவனத்தில் சோதனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை அடையாரில் உள்ள சேவியர் பிரிட்டோ வீடு மற்றும் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகம் ஆகிய பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனைக்கு பின்னர் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
’மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பின் போது விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்த நிலையில் தற்போது அந்த படத்தின் தயாரிப்பாளர் வீட்டிலும் சோதனை நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


















