இந்தியா
அரபிக்கடலில் உருவானது வாயு புயல்: வெளுத்து வாங்கும் மழை!

அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழையானது ஒரு வார காலதாமதத்துக்கு பின்னர் சனிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் கனமழை காரணமாக பாபநாசம் அணை ஒரே நாளில் 11 அடி உயர்ந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு வாயு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாயு புயல் நாளை மறுநாள் குஜராத் அருகே கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக வரும் 13-ஆம் தேதி மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.
வாயு புயலால் தமிழகத்துக்கு பெரிய அளவில் மழை இருக்காது. ஆனால் 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் குஜராத்தில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் அங்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர். ராணுவம், கப்பற்படை, கடலோர காவல்படைகள் உஷார் நிலையில் உள்ளது.




















