இந்தியா
கர்ப்பமான மாணவிகளுக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுப்பு.. கேரள பல்கலை அதிரடி முடிவு!

கேரளாவில் உள்ள பல்கலைகழகத்தில் கர்ப்பமான மாணவிகளுக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுமுறை அளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் முதல் முறையாக கர்ப்பம் ஆன மாணவிகளுக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்க கேரளாவில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்து வரும் மாணவிகள் கர்ப்பமாக இருந்தால் அவர்களுக்கு மகப்பேறு விடுப்பு 60 நாட்கள் வழங்கப்படும் என அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிடி அரவிந்த குமார் தலைமையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இது குறித்து ஆய்வு செய்த அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு சிண்டிகேட் ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழகத்தின் அறிவிப்பின்படி மகப்பேறு விடுமுறையை பிரசவத்திற்கு முன் அல்லது பிரசவத்திற்கு பின் எடுத்துக்கொள்ளலாம் என்றும் ஆனால் முதல் அல்லது இரண்டாவது கர்ப்பத்திற்கு மட்டுமே விடுப்பு வழங்கப்படும் என்றும் ஒரு மாணவிக்கு ஒருமுறை மட்டுமே மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை காலத்தில் சாதாரண விடுமுறை நாட்களும் உள்ளடங்கும் என்றும் வேறு சிறப்பு விடுமுறைகளை அதனுடன் இணைக்க முடியாது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகப்பேறுக்கு மட்டுமின்றி கருக்கலைப்பு, டியூபெக்டமி போன்றவற்றிகும் 14 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கர்ப்பமான மாணவிகள் மகப்பேறு விடுப்பில் இருக்கும் போது அவர்களுடைய படிப்பு பாதிக்காமல் இருப்பதற்காக அவர்கள் செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மகப்பேறு விடுப்பில் இருக்கும் மாணவிகளுக்கு ஆய்வகம் மற்றும் உயிரியல் தேர்வுகள் இருந்தால் அந்தந்த துறையின் தலைவர் அவர் தேர்வு எழுத சிறப்பு அனுமதி அளிக்கப்படும் என்றும் சிண்டிகேட் முடிவு செய்திருக்கிறது.
மகப்பேறு விடுப்பு எடுக்க விரும்புபவர்கள் விடுமுறை தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பே பல்கலைக்கழக நிர்வாகத்தில் விண்ணப்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் விண்ணப்பத்துடன் மருத்துவ சான்றிதழ் இணைக்க வேண்டியது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
























