இந்தியா
காஷ்மீரை போல தமிழகத்தையும் யூனியன் பிரதேசமாக்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? திருச்சி சிவா!

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளதையடுத்து, அம்மாநிலம் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதே நிலைமை தமிழகத்துக்கு ஏன் வராது என திமுக எம்பி திருச்சி சிவா மாநிலங்களவையில் பேசியுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ நீக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாநிலங்களவையில் இது தொடர்பாக பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீர் மாநிலத்துக்கான அரசியல் சாசனப் பிரிவு 370 நீக்கப்படுவதாக அறிவித்தார். மேலும் அது இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த அறிவிப்பை கேட்ட அடுத்த நொடியிலேயே மாநிலங்களவையில் அமளி வெடித்தது. எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு காஷ்மீர் பிரிக்கப்படுவதற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இது தொடர்பாக மாநிலங்களவையில் நீண்ட விவாதம் நடைபெற்றது.
இதில் திமுக சார்பாக பேசிய திருச்சி சிவா, நீங்கள் ஒரு முடிவு எடுத்துள்ளீர்கள் என்றால் சம்பந்தப்பட்ட பகுதி மக்களின் கருத்துக்களைக் கேட்டீர்களா? அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட மாநில சட்டமன்றத்தின் கருத்துக்களையாவது கேட்டீர்களா? எனவே இதனை நிறுத்திவைக்க வேண்டும். நாளை இதே அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்கம், மஹராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களை யூனியன் பிரதேசமாக்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
இன்னும் 2 மாதங்களில் ஜம்மு காஷ்மீருக்கு தேர்தல் வரவுள்ளது. அதுவரை காத்திருந்து மாநில சட்டமன்றத்தின் கருத்து கேட்டு முடிவெடுக்காமல் அவசர அவசரமாக சட்டப் பிரிவை நீக்குவது ஏன்? குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும்போது சட்டப் பிரிவை நீக்குவது ஏற்றுக்கொள்ள முடியாது. காஷ்மீர் மக்களின் அம்மாநில அரசின் கருத்துக்களை கேட்காமல் எடுக்கப்பட்ட இந்த முடிவை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்றார்.













