இந்தியா
FASTag வந்த பிறகு தமிழகத்தில் டோல் வசூல் இரண்டு மடங்காக அதிகரிப்பு!

நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட்டுகளில் FASTag முறை கட்டாயப்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் டோல் கட்டணம் வசூல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையில் தமிழ்நாட்டில் உள்ள டோல் கேட்டுகளில் FASTag முறையில் 3,421 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதுவே 2020-ம் ஆண்டு மொத்த டோல் கட்டணம் வசூல் 3,875 கோடி ரூபாய். 2016-2017 நிதியாண்டில் 3.320 கோடி ரூபாய். 2018-ம் ஆண்டு 3,262 கோடி ரூபாய். 2019-ம் ஆண்டு 3,392 கோடி ரூபாய் டோல் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதை வைத்துப் பார்க்கும் போது கடந்த பல ஆண்டுகளாகவே டோல் கட்டணம் வசூலிப்பில் மிகப் பெரிய மோசடி நடைபெற்று இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் நடப்பு நிதியாண்டில் டோல் கட்டணம் வசூல் 5 மடங்கு அதிகரித்துள்ளது.

சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் மட்டும் டோல் கட்டணம் வசூல் 2000 கோடி ரூபாய் நடப்பு ஆண்டில் கூடுதலாகக் கிடைக்கும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை எதிர்பார்க்கிறது.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் 47 டோல் கேட்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.








