தமிழ்நாடு
எதிர்ப்புக்கு மத்தியில் 12 மணி நேர வேலை மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது!

8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றி வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற திருத்த சட்ட மசோதா சட்டப் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு திமுகவின் கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 125க்கும் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.

#image_title
தமிழக சட்டசபையில் இன்று தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, தனியார் நிறுவனங்களில் பணி நேரம் 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த திருத்த சட்டத்தை கண்டித்து திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து சட்ட சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் கணேசன், தொழிலாளர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே 12 மணி நேரம் வேலை செய்யலாம் என்றார். திமுகவிற்கு 125 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 4 மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், வேல்முருகன், கொங்கு ஈஸ்வரன் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்யவில்லை.
இதனையடுத்து இந்த 2023-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா பேரவையில் 125-க்கும் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. சிபிஎம், சிபிஐ, விசிக போன்ற கட்சிகள் வெளிநடப்பு செய்தன.