தமிழ்நாடு
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: சட்டசபையில் மீண்டும் தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியது தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கிய நிலையில் இன்று இந்த மசோதாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

#image_title
இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய முதல்வர் ஸ்டாலின், மிகவும் கனத்த இதயத்தோடு நான் நின்று கொண்டிருக்கிறேன். இந்த சூதாட்டத்தால் 41 பேர் தற்கொலை செய்துகொண்டது மிகவும் துயரமான நிகழ்வு. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் கடமை அரசுக்கு உள்ளது. மக்களை காப்பதே அரசின் கடமை. இனியொரு உயிர் ஆன்லைன் ரம்மியால் பறிபோகக் கூடாது.
சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இதனை தடைசெய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்று நான் மீண்டும் சொல்கிறேன். மத்திய அரசும் கூறியிருக்கிறது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாண்புமிகு உறுப்பினர்கள் பார்வைக்கு மீண்டும் வைக்கப்படுகிறது. மீண்டும் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றார்.
மேலும் இந்த மசோதா குறித்து பேசிய முதல்வர், மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக இதனை நிறைவேற்றித்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த சட்டம் அறிவால் மட்டுமல்ல இதயத்தால் உருவாக்கப்பட்டது. மக்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்தவும், நெறிப்படுத்தவும், காக்கவும் மாநில அரசுக்கு உரிமை உண்டு என்றார்.


















