இந்தியா
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு கட்டாயம் வழங்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டியது கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் அசோக்குமார் அடங்கிய அமர்வு விசாரணை செய்து இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சற்றுமுன் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியது கட்டாயம் என்றும் இழப்பீடு வழங்குவது என்பது அரசின் விருப்பத்தை பொறுத்தது அல்ல என்றும் சட்டப்படி கட்டாயம் மத்திய அரசுக்கு அந்த கடமை உள்ளது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 6 வாரத்தில் மத்திய அரசு வகுக்க வேண்டும் என்றும் இழப்பீடு எவ்வளவு என்பதை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் சுமார் 4 லட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த உத்தரவு காரணமாக அனைவருக்கும் இழப்பீடு கிடைக்கும் என்பது தெரிய வருகிறது.















