தமிழ்நாடு
48 மணி நேரத்தில் மன்னிப்பு, 50 கோடி இழப்பீடு: அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பிய உதயநிதி ஸ்டாலின்!

DMK Files என்று திமுகவினரின் சொத்துப்பட்டியல் மற்றும் ஊழல் விவகாரங்கள் குறித்து வெளியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் அதில் சில தகவல்களை கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

#image_title
ஏப்ரல் 14-ஆம் தேதி திமுகவினரின் சொத்துப்பட்டியலை வெளியிட்டு பேசிய அண்ணாமலை, 2008-ஆம் ஆண்டு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை ஆரம்பிக்கும் போது சொல்லிக்குள்ளும் அளவிற்கு உதயநிதி ஸ்டாலின் எந்த வேலையும் செய்யவில்லை. 2008 முதல் 2011 வரை 300 கோடி ரூபாய்க்கு படம் எடுத்துள்ளார். அதில் நிறைய படங்கள் தோல்வி அடைந்திருக்கிறது. அப்படியானால் அந்த பணம் எங்கிருந்து வந்தது. ரெட் ஜெயண்ட் முதலீட்டாளர்கள் யார்? இந்த நிறுவனத்தின் இன்றைய மதிப்பீடு 2010 கோடி என தெரிவித்தார்.
மேலும், நோபல் ஸ்டீல்ஸ் என்ற கம்பெனியின் இயக்குநராக 2009-ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் இருந்தார். பின்னர் ராஜினாமா செய்தார். 2016-இல் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இயக்குநராக இருந்து ராஜினாமா செய்தார். இப்படி திமுகவின் முதல் குடும்பங்களை சேர்ந்தவர்கள் இயக்குநர்களாக இருந்து ராஜினாமா செய்த அந்த கம்பெனியில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அந்த கம்பெனியுடன் கையெழுத்திட்டு 1000 கோடி ரூபாய் தமிழகத்துக்குள் வருகிறது என்றால் அது எப்படி? என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் வீடியோவில் உதயநிதி ஸ்டாலினுக்கு 2,039 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் அண்ணாமலை.
இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது மானநஷ்ட வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது மூத்த வழக்கறிஞர் வில்சன் மூலம் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதால் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் 50 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என கூறப்பட்டுள்ளது.