தொழில்நுட்பம்
இனி டெஸ்க்டாப்பிலும் WhatsApp வாய்ஸ், வீடியோ காலிங் வசதி!

இந்தியாவிலும் தமிழகத்திலும் மிகவும் பிரபலமாக இருக்கும் மெஸேஜிங் தளம் வாட்ஸ்அப். இதில் வரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் அன்றாட வாழ்க்கையில் தொலைதொடர்பை மேலும் எளிமையாக்கி வருகிறது. அந்த வகையில் மிகவும் எதிர்பாரத்துக் கொண்டிருந்த மற்றும் முக்கியமான அப்டேட்டை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
அதாவது, இதுவரை மொபைல் போன்கள் மூலம் மட்டுமே வாட்ஸ்அப்பில் இருந்து வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் செய்யலாம் என்கிற நிலை இருந்தது. தற்போது இதே விஷயத்தை இனி டெஸ்டாப்பில் இருந்தும் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறதாம். இது குறித்தான சோதனைகளில் வாட்ஸ்அப் நிறுவனம், கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகிறது.
போனில் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியை, ‘வாட்ஸ்அப் வெப்’ ஆப்ஷன் மூலம் கம்ப்யூட்டரில் இணைத்து, அதிலேயே பயன்படுத்த முடியும். வெறும் மெஸேஜிங் மட்டும் டெஸ்க்டாப் மூலம் செய்ய முடியும் என்கிற நிலை சீக்கிரமே மாற உள்ளது. அதே நேரத்தில் போனில் ஆன்லைனில் இருந்தால் மட்டுமே டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங்கை செய்ய முடியும்.
இந்நிலையில் குறிப்பிட்ட சில டெஸ்க்டாப் பயனர்களுக்கு மட்டும் இந்தப் புதிய காலிங் வசதிகளை வாட்ஸ்அப் வழங்கியுள்ளதாக தெரிகிறது. சீக்கிரமே அனைத்து டெஸ்க்டாப் பயனர்களும் இந்த அட்டகாசமான அப்டேட்டைப் பெற முடியும்.







