இந்தியா
காங்கிரஸ் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் உயர்மட்ட கூட்டம்: பாதியிலேயே வெளியேறிய சோனியா காந்தி!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றியது. அதிலும் பாஜக 303 இடங்களை கைப்பற்றியது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் 52 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்தது.
இந்த தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி பொறுப்பேற்று ராஜினாமா செய்தார். மேலும் தனது குடும்பத்தை சேர்ந்த யாரும் தலைவர் பதவிக்கு வரமாட்டார்கள், புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள் என காங்கிரஸ் காரியக்கமிட்டியை வலியுறுத்தினார் ராகுல் காந்தி. பல மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியை சமரசம் செய்ய முயற்சித்தும் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கலந்துகொண்ட உயர்மட்ட கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் புதிய தலைவர் யார் என்ற முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பாதியிலேயே வெளியேறினார். தலைவர் பொறுப்பிற்கு புதிய நபரை தேர்ந்தெடுப்பதில் தன்னுடைய தலையீடோ அல்லது ராகுல் காந்தியின் தலையீடோ இருக்க கூடாது என்பதற்காகவே தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனையில் பங்கேற்காமல் பாதியிலேயே வெளியேறுவதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.












