தமிழ்நாடு
திமுக பொருளாளர் துரைமுருகன் பங்களாவில் சந்தன மரம் வெட்டிக் கடத்தல்!

திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான பங்களாவில் இரண்டு சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள சுற்றுலாத் தலமான ஏலகிரி மலை மஞ்சம்கொல்லை புதூர் கிராமத்தில், துரைமுருகனுக்குச் சொந்தமான பங்களா ஒன்று உள்ளது. கோடை காலத்தில் துரைமுருகன் இங்கு குடும்பத்துடன் வந்து ஓய்வெடுப்பது வழக்கம். இந்த பங்களாவில் உள்ள தோட்டத்தில் சந்தன மரம், தேக்கு உள்ளிட்ட பல விலை உயர்ந்த மரங்கள் வளர்க்கப்பட்டு வந்துள்ளது.
இந்த பங்களாவுக்கு பாதுகாப்பாக அதனை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் செக்யூரிட்டியாகவும் அங்கு வேலை செய்கிறார். இந்த சூழ்நிலையில் மர்ம நபர்கள் சிலர் துணிச்சலாக அங்குள்ள இரண்டு சந்தன மரங்களை வெட்டிக் கடத்திச் சென்றுள்ளனர். இதனையடுத்து பங்களா காவலாளி போலிசில் புகார் ஒன்றை அளித்தார்.
இதனையடுத்து காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய கும்பலைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
















