சினிமா செய்திகள்
மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் சந்திப்பு: மறுபடியும் முதல்ல இருந்தா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து மீண்டும் முதலில் இருந்தா? என நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று தெரிவித்திருந்தார். ஆனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திடீரென தனது உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரவில்லை என்று கூறியது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்கா சென்று உடல்நிலையை பரிசோதனை முடித்து விட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், வரும் 12ஆம் தேதி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளரை சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளார். மாவட்ட செயலாளர்கள் மட்டும் சென்னைக்கு வரவேண்டும் என தொலைபேசி மூலம் ரஜினி தரப்பிலிருந்து தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஜூலை 12ஆம் தேதி ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளி வந்துள்ளன.
தேர்தல் முடிந்தபின் ஆலோசனைக்கு தேவை என்ன? என்ற கேள்வி எழுந்தாலும் இந்த ஆலோசனையில் ரஜினி என்ன கூற இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரஜினியின் ’அண்ணாத்த’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக அவர் மீண்டும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் விமர்சனம் எழுந்து உள்ளது.









