இந்தியா
வாகனம் ஓட்டும்போது மொபைல்போன் பேசினால் குற்றமாகாது: மத்திய அமைச்சர் அறிவிப்பு!

வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பேசினால் குற்றம் என கருதப்பட்டு தற்போது அபராதம் பெறப்பட்டு வரும் நிலையில் வாகனம் ஓட்டும் போது மொபைல் பேசினால் குற்றம் இல்லை என்ற அறிவிப்பு விரைவில் வெளிவரும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
வாகனங்கள் ஓட்டும்போது தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மொபைல் போனில் பேசினால் குற்றமாகாது என ஏற்கனவே பல நாடுகளில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் இது குறித்து மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியபோது, ‘வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துவது சட்ட விரோதம் இல்லை என்றும் அதற்காக அபராதம் விதிக்கப்படாது என்றும் விரைவில் இது குறித்த சட்டம் இயற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆனால் அதே நேரத்தில் மொபைல் போனை கையில் வைத்துக் கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் பேசக்கூடாது என்றும் மொபைல் போனை பாக்கெட்டில் அல்லது அதற்கென ஸ்டாண்டில் வைத்துக் கொண்டு பேசலாம் என்றும் அவ்வாறு வாகனம் ஓட்டும்போது மொபைல் போனில் பேசினால் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படாது என்றும் போக்குவரத்து போலீசாரும் அபராதம் விதிக்க மாட்டார்கள் என்றும் கூறினார்.
ஒருவேளை அதையும் மீறி போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தால் வாகன ஓட்டுநர்கள் அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். இந்த சட்டம் விரைவில் இந்தியாவில் அமலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.