தமிழ்நாடு
பொது இடங்களில் குப்பையைக் கொட்டினால் அபராதம்: எச்சரிக்கும் சென்னை மாநகராட்சி!

சென்னையில் இருக்கும் சாலைகளில் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு, அபராதம் விதித்து அதோடு அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
குப்பை கொட்டினால் அபராதம்
சென்னை மாநகராட்சி சாலையில் குப்பை கொட்டுவது தொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், சென்னை மாநகரைத் தூய்மையாகவும், அழகுடனும் பராமரித்துக் கொள்ள சிங்காரச் சென்னை 2.0 உள்ளிட்ட பல திட்டங்களின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில், குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுபவர்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி முதல் மே மாதம் 11 ஆம் தேதி வரையில், பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.11 லட்சத்து 55 ஆயிரத்து 90-ம், கட்டுமான கழிவுகளை கொட்டியவர்களுக்கு ரூ.9 லட்சத்து 93 ஆயிரத்து 300-ம் அபராதமாக விதிக்கப்பட்டது. இவை இரண்டையும் சேர்த்து மொத்தமாக ரூ.21 லட்சத்து 48 ஆயிரத்து 390 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு
ஆகவே, பொதுமக்கள் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுவதை தவிர்த்து விட்டு, சென்னை மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இதனை மீறும் நபர்களுக்கு நிச்சயமாக அபராதம் விதிக்கப்படும். பொது இடங்கள் மற்றும் காலி நிலங்களில் அதிக குப்பைகள் காணப்பட்டால், சென்னை மாநகராட்சியின் உடனே 1913 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.