இந்தியா
10 நாட்களில் ரூ.1000 கோடி நஷ்டம்.. மீண்டு வருமா அதானி குழுமம்?

கடந்த மாதம் வரை உலகின் மூன்றாவது மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற புகழுடன் இருந்த அதானி 10 நாட்களில் ரூபாய் ஆயிரம் கோடி இழந்து தற்போது உலக பணக்காரர் பட்டியலில் முதல் பத்து இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் அதானி குழுமத்திற்கு சுமார் 2 லட்சம் கோடி கடன் இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த சிக்கலான நிலையில் இருந்து அவர் மீண்டு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்திற்கு எதிராக வெளியிட்ட அறிக்கை காரணமாக கடந்த 10 நாட்களில் அதானி நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பெரும் நஷ்டத்தை சந்தித்தன. பத்தே நாட்களில் இந்நிறுவனத்தின் பங்குகள் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்பை இழந்துள்ளதாகவும் இந்தியா மற்றும் ஆசிய பணக்காரர் என்ற பட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனத்தின் அம்பானி இடம் அவர் இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த வாரம் ஜனவரி 24ஆம் தேதி ஹிண்டன்பெர்க் அறிக்கை வெளிவந்த நாளிலிருந்து இன்று வரை என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
24 ஜனவரி 2023
அதானி குழுமம் கணக்கு மோசடி, பங்குக் கையாளுதல் மற்றும் பணமோசடி செய்ததாகக் குற்றம் சாட்டி ஹிண்டன்பர்க் ரிசர்ச் அதன் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் ‘உலகின் 3-வது பணக்காரர் எப்படி கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய மோசடி செய்தார் என்பதை தெரிவித்தது. ஹிண்டன்பர்க் தனது ஆராய்ச்சி அறிக்கைவெளியானவுடன் அதானியின் பங்குகள் வீழ்ச்சியடையத் தொடங்குகின்றன, அதானி கிரீன் எனர்ஜி 0.7%, அதானி போர்ட்ஸ் 1%, மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் 0.8% வீழ்ந்தது.
ஜனவரி 25, 2023
ஹிண்டன்பர்க்கின் அறிக்கை வெளிவந்த மறுநாள் அதானி குழுமத்தின் CFO ஜுகேஷிந்தர் சிங் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி அறிக்கை “அடிப்படையற்றது” என்றும், அதில் உள்ள தகவல்கள் எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது என்றும் தெரிவித்தது. விளக்க அறிக்கை வெளியானாலும் அதானி எண்டர்பிரைசஸ் 1.5%, அதானி கிரீன் எனர்ஜி 3%, அதானி போர்ட்ஸ் 6%, அதானி பவர் 4%, மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் 8% குறைந்தது. ஒரே நாளில் அதானி குழும நிறுவனங்கள் மொத்தம் ரூ.97,000 கோடியை இழந்தது.
ஜனவரி 26, 2023
அதானியின் பங்குகள் தொடர்ந்து சரிந்ததால், அதன் சட்டத் தலைவர் ஜதின் ஜலுந்த்வாலா அறிக்கையில், “ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட தீங்கிழைக்கும் ஆராயப்படாத அறிக்கையால் அதானி குழுமம் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அந்நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அதானி முடிந்தால் அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யட்டும், வழக்கை சந்திக்க தயார் என்று கூறியிருந்தது.
ஜனவரி 27, 2023
இந்த பரபரப்பில் அதானி குழுமம் ரூ.20,000 கோடிக்கான எப்.பி.ஓ பங்குகளை அறிமுகம் செய்கிறது. ஆனாலும் அதானியின் நிறுவனங்கள் இன்றும் சரிந்தன. அதானி எண்டர்பிரைசஸ் 18%, அதானி க்ரீன் எனர்ஜி 19%, அதானி போர்ட்ஸ் 16%, மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் 19% சரிந்தன. இன்று தான் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
ஜனவரி 28, 2023
அதானி குழுமம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பத்திரங்கள் பற்றிய ஆய்வை தொடங்குவதாக இன்டெக்ஸ் வழங்குநரான MSCI கூறியது. MSCI என்பது ஒரு அமெரிக்க நிதி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 29, 2023
ஹிண்டர்ன்பர்க் குற்றச்சாட்டுக்கு அதானி குழுமம் 413 பக்க பதில் அறிக்கை அளித்தது.
ஜனவரி 30, 2023
அதானி குழுமத்தின் 413-பக்க பதிலுக்குப் பிறகு ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் ஆண்டர்சன் பதிலளித்தார். தேசியவாதத்தால் மோசடியை மறைக்க முடியாது, நாங்கள் எழுப்பிய ஒவ்வொரு முக்கிய குற்றச்சாட்டுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றார். இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் மேலும் சரிந்தது.
ஜனவரி 31, 2023
அதானி குழுப் பங்குகளின் இறங்கினாலும் அதன் FPO முழுமையாக விற்பனிஅ செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேபேங்க் செக்யூரிட்டீஸ், அபுதாபி முதலீட்டு ஆணையம், HDFC லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப் ஆகிய நிறுவனங்கள் அதானிக்கு கைகொடுத்தது. இதனால் அதானி எண்டர்பிரைஸ் உட்பட சில அதானி குழும பங்குகள் ஓரளவு ஏற்றம் கண்டன.
பிப்ரவரி 1, 2023
இன்று அதானி குழுமத்தின் பங்குகள் மீண்டும் பெரும் சரிவை சந்தித்தன. இன்று அதானி எண்டர்பிரைசஸ் 28% சரிந்தது, அதானி கிரீன் எனர்ஜி 5% அதிகமாகவும், அதானி போர்ட்ஸ் 19% சரிந்தன, அதானி டிரான்ஸ்மிஷன் 2% சரிந்தன. இன்று தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் முகேஷ் அம்பானியிடம் கௌதம் அதானி பணக்கார இந்தியர் மற்றும் ஆசியர் என்ற பட்டத்தையும் இழந்தார்.
பிப்ரவரி 2, 2023
அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிந்ததால் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மூலதன இழப்புகள் $100 பில்லியனைத் தாண்டியது. அதானி குழுமத்திற்கு சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய வங்கியான கிரெடிட் சூயிஸ் மற்றும் சிட்டி குழுமம் கடன்களை நிறுத்தியது.
பிப்ரவரி 3, 2023
அதானி எண்டர்பிரைசஸ் டவ் ஜோன்ஸ் குறியீடுகளில் இருந்து நீக்கப்பட்டது. அதுமட்டுமல்ல; இந்தியாவின் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் கூட அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அதன் எஃப்&ஓ தடை பட்டியலில் பிப்ரவரி 3ம் தேதி சேர்த்தது. மேலும், தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) அதானி போர்ட்ஸ், அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகியவற்றை கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ் கொண்டு வந்தது.