சினிமா செய்திகள்
கே.வி.ஆனந்த், செல்லத்துரை இருவரும் ஒரே டைட்டில் கார்டில்: என்ன படம்?

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கேவி ஆனந்த் அவர்கள் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியை பார்த்தோம். அவருடைய மறைவு திரையுலகினர்களை அதிர்ச்சி அடைய செய்தது என்பதும் ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு இரங்கல் தெரிவித்து என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்று சீனியர் நடிகர் செல்லத்துரை என்பவரும் காலமானார். ஒரே நாளில் இருவரது மறைவு தமிழ் திரையுலகையே உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் நேற்று காலமான கே.வி. ஆனந்த் மற்றும் செல்லத்துரை ஆகிய இருவரும் ஒரே டைட்டில் கார்டில் இடம்பெற்ற குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த டைட்டில் கார்டில் ஒளிப்பதிவு இயக்குநர் கேவி ஆனந்த் என்ற டைட்டில் போடப்பட்டிருக்கும் போது, சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் செல்லத்துரை இருக்கும் காட்சி உள்ளது.
இந்த டைட்டில் கார்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’ படத்தின் டைட்டில் கார்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஆரம்ப காட்சியில் தான் ரஜினி உள்பட ஒருசிலர் சிறையில் இருக்கும் காட்சிகள் வரும். அப்போது டைட்டில் கார்டு திரையில் தோன்றும் நிலையில் ஒளிப்பதிவு இயக்குனர் கே.வி.ஆனந்த் என்று டைட்டில் கார்டு போடப்பட்டபோது செல்லத்துரையின் காட்சி உள்ளது. இந்த டைட்டில் கார்டில் உள்ள இருவருமே நேற்று ஒரே நாளில் காலமானது எதிர்பாராத் ஒற்றுமை என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.


















