தமிழ்நாடு
நான் சட்டையை கிழித்துக்கொள்ளமாட்டேன்: ஸ்டாலினை சீண்டும் கமல்!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அதிமுக, திமுக கட்சிகளை ஊழல் கட்சிகள் என தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் கமலை திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைத்தநிலையிலும் கமல் திமுகவுக்கு எதிராக தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
சென்னையில் நேற்று தனியார் கல்லூரி மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல் திமுகவையும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினையும் விமர்சித்தார். கிராம சபைக் கூட்டங்களை தன்னைப் பார்த்து திமுக காப்பியடிப்பதாக குற்றம் சாட்டினார் கமல்.
மேலும் நான் சட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ளமாட்டேன். அப்படி சட்டை கிழிந்தாலும் நல்ல சட்டை போட்டுக் கொண்டுதான் வெளியில் வருவேன் என்று ஸ்டாலினை கமல் நேரடியாக சீண்டினார். கடந்தமுறை சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தபோது மு.க.ஸ்டாலின் சட்டையை கிழித்துக்கொண்டு ஊடகங்கள் முன்னிலையில் வந்து பேட்டிக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.


















