செய்திகள்
3வது ஆண்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் – செப்டம்பர் 15ல் புதிய அறிவிப்பு வருமா?

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தமிழ்நாட்டில் மாநில அரசால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தற்போது 1.15 கோடி பெண்கள் மாதந்தோறும் ரூ.1000 தொகையை நேரடியாக தங்களது வங்கிக் கணக்கில் பெற்றுக் கொண்டு வருகின்றனர்.
இந்த திட்டம் நாட்டின் பல மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ, பெண்களுக்கான உரிமை மற்றும் பொருளாதார சுயநிலைக்கு பெரும் ஆதரவாக உள்ளது. தற்போது, இந்தத் திட்டத்தில் புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. தகுதியான ஆனால் முன்பு விண்ணப்பிக்காதவர்கள், புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள், வேலை நிமித்தமாக வெளியூரிலிருந்து திரும்பியவர்கள், அரசு விதிமுறை விலக்குகளுக்குட்பட்டோர் என பலர் தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று விண்ணப்பித்து வருகின்றனர்.
ஜூலை 15ஆம் தேதி தொடங்கிய முதல் கட்டத்தில் ஏற்கனவே 17 லட்சம் பெண்கள் புதியதாக விண்ணப்பித்துள்ளனர் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும் முகாமிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் ஆவணங்களை சமர்ப்பித்து வருகின்றனர்.
விண்ணப்பித்தவர்கள் தங்களது மனுக்கள் எந்த நிலையில் உள்ளன என்பதை தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றனர். அரசு, 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.
முக்கியமாக, வரும் செப்டம்பர் 15ஆம் தேதி இந்தத் திட்டம் தனது 2 ஆண்டுகளை நிறைவு செய்து 3வது ஆண்டில் நுழைகிறது. அது மட்டுமல்லாமல் அன்றைய தினம் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் என்பதால், பெண்களை மகிழ்விக்கும் வகையில் புதிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த நாளில், திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு எப்போது முதல் ரூ.1000 வழங்கப்படும் என்பதைப் பற்றிய அப்டேட் வெளியாகும் என மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.


