செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் – செப்டம்பர் 15ல் புதிய அறிவிப்பு வருமா?

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக பெண்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தற்போது மாதந்தோறும் சுமார் 1.15 கோடி பெண்கள் தங்கள் வங்கி கணக்கில் ரூ.1000 பெறுகின்றனர். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு, திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்யும் நோக்கில் புதிய விண்ணப்பங்களையும் பெற்றுக் கொண்டுள்ளது.
“உங்களுடன் ஸ்டாலின் முகாம்” என்ற திட்டத்தின் மூலம் தகுதியான பெண்கள், கடந்தமுறை விண்ணப்பிக்காமல் விடுபட்டவர்கள் அல்லது புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். ஜூலை 15 ஆம் தேதி தொடங்கிய முகாமில் இதுவரை 17 லட்சம் பெண்கள் புதியதாக விண்ணப்பித்துள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வெளியூரில் இருந்து திரும்பிய பெண்கள், காலமுறை ஓய்வூதியம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலரும் தற்போது விண்ணப்பித்து வருகின்றனர். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றனர். அரசு அறிவிப்பின்படி, முகாமில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 15 இந்த திட்டத்துக்கு முக்கியமான நாள். அன்றைய தினம், திட்டம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து, மூன்றாவது ஆண்டில் பயணிக்கிறது. மேலும், அது தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால், அன்றைய தினம் புதிய அறிவிப்பு வெளியாகுமா?, குறிப்பாக புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு எப்போது முதல் ரூ.1000 வழங்கப்படும் என அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமா என்ற பெரும் எதிர்பார்ப்பு பெண்களிடையே நிலவுகிறது.



