தமிழ்நாடு
அதிமுக திருப்பி அடித்தால் பாஜக தாங்காது… அண்ணாமலை காணாமல் போவார்… ஜெயக்குமார் ஆவேசம்!

சில தினங்களாக பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்து வருவது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் எடப்பாடி பழனிசாமியின் உருவ படத்தை எரித்து அதிமுகவை சீண்டியுள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பாக அதிமுகவின் ஜெயக்குமார் அண்ணாமலைக்கு காட்டமன பதிலடி கொடுத்துள்ளார்.

#image_title
அதிமுக சார்பில் மகளிர் தின கொண்டாட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரிடம், பாஜக நிர்வாகிகளை அழைத்து வந்து அதிமுகவை வளர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என அண்ணாமலை கூறியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், கல் வீசி உடைப்பதற்கு அதிமுக ஒன்றும் கண்ணாடி கிடையாது. அது ஒரு பெரும் சமுத்திரம். அதிமுக மீது கல்லெறிந்தால் அண்ணாமலை காணாமல் போவார். நிர்வாகிகள் கட்சி மாறினால் அதை ஏற்றுக்கொள்ளும் தலைவர்களுக்கான பக்குவம் அண்ணாமலைக்கு வேண்டும். எடப்பாடி பழனிசாமியின் உருவ படத்தை எரித்தவர்களை பாஜகவில் இருந்து நீக்க வேண்டும். அதிமுக தொண்டர்கள் பதிலடி கொடுத்தால் பாஜகவால் தாங்க முடியாது என்றார்.