இந்தியா
தங்கத்தை அரசு பறிக்காது… ஆனால் ‘செல்லாக்காசாக்க’ வாய்ப்பு உண்டு!

தங்கத்தை அரசு பறிக்காது… ஆனால் ‘செல்லாக்காசாக்க’ வாய்ப்பு உண்டு! நான் சொல்லப் போகும் விஷயம் கண்டிப்பாக நடக்கும்
சமீபகாலமாக இந்திய மக்களிடையே ஒரு வதந்தி வேகமாகப் பரவி வருகிறது. அதாவது, மக்களிடம் இருக்கும் அதிகப்படியான தங்கத்தை மத்திய அரசு திரும்பப் பெறப் போகிறது அல்லது பறிமுதல் செய்யப் போகிறது என்பதுதான் அது. ஆனால், நடைமுறையில் இது சாத்தியமற்ற ஒன்று. இந்தியக் கலாச்சாரத்தில் ஊறிப்போன தங்கத்தை, குறிப்பாக பெண்களின் நகைகளை வீடு வீடாகச் சென்று சோதனையிட்டு பறிமுதல் செய்வது எந்த ஒரு அரசாலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத காரியம். அப்படி ஒரு நடவடிக்கை எடுத்தால் அது மிகப்பெரிய சமூகக் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பது அரசுக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால், அரசு தங்கத்தை நம்மிடமிருந்து பறிக்காமலே, அதைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஒரு மிகச்சாமர்த்தியமான வழியைத் கையாளும் வாய்ப்பு அதிகம். அதைத்தான் பொருளாதார நிபுணர்கள் “சாஃப்ட் டிமானிடைசேஷன்” (Soft Demonetization) என்கிறார்கள். அதாவது பணமதிப்பிழப்பு நடவடிக்கை எப்படி ரொக்கப் பணத்தை வங்கிக் கணக்கிற்குள் வரவழைத்ததோ, அதே பாணியில் தங்கத்தையும் கணக்கிற்குள் கொண்டுவரும் உத்தி இது.
எதிர்காலத்தில், “ரசீது இல்லையென்றால் தங்கத்திற்கு மதிப்பில்லை” என்ற நிலையை அரசு உருவாக்கலாம். அதாவது, நீங்கள் கஷ்ட காலத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் நகையை எடுத்துக்கொண்டு வங்கிக்குச் சென்று அடகு வைக்க நினைத்தாலோ அல்லது நகைக்கடையில் கொடுத்து பணமாக்க நினைத்தாலோ, அந்தத் தங்கம் வாங்கியதற்கான முறையான ரசீது அல்லது அரசின் HUID பதிவுச் சான்றிதழ் கட்டாயம் கேட்கப்படலாம்.
அப்படி ரசீது இல்லாத பட்சத்தில், அந்தத் தங்கத்தை வங்கிகள் ஏற்காது; நகைக்கடைகளும் வாங்காது என்ற நிலை வந்தால் என்ன நடக்கும்? நம் கையில் பல லட்சம் மதிப்புள்ள தங்கம் இருக்கும், ஆனால் அதை அவசரத்திற்குப் பயன்படுத்த முடியாது. அது வெறும் அழகுக்கான உலோகமாக மட்டுமே இருக்கும். கள்ளச் சந்தையில் விற்றால் பாதி விலைக்குக் கூட வாங்க மாட்டார்கள். இதன் மூலம், கணக்கில் வராத தங்கத்தை “முடங்கிய சொத்தாக” (Dead Asset) அரசு மாற்றிவிடும்.
இதைச் சரிசெய்ய, அரசு ஒருவேளை “தங்க வருமான வரித் தாக்கல்” போன்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, மக்கள் தங்கள் கையில் உள்ள ரசீது இல்லாத தங்கத்தை, குறிப்பிட்ட வரியைக் கட்டி கணக்கில் ஏற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பளிக்கலாம். இதன் மூலம் இந்தியக் குடும்பங்களில் முடங்கிக் கிடக்கும் சுமார் 34,000 டன் தங்கமும் நாட்டின் முறையான பொருளாதாரக் கணக்கிற்குள் வந்துவிடும்.
எனவே, தங்கத்தைப் பறிமுதல் செய்வார்கள் என்று பயப்படுவதை விட, நம்மிடம் இருக்கும் தங்கத்திற்கு முறையான ஆவணங்கள் இருக்கிறதா என்பதை உறுதி செய்வதே புத்திசாலித்தனம். இனிவரும் காலங்களில் தங்கத்தை விட, அதற்கான ரசீதுதான் மிக முக்கியமானதாகப் பேசப்படும்.

