சினிமா
நயன்தாரா வழியில் ராஷ்மிகா?

நடிகை ராஷ்மிகா தற்போது ஒப்பந்தம் ஆகியுள்ள புதிய படம் குறித்து நடிகர்கள் தங்கள் விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடியவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழில் கடைசியாக விஜய்யுக்கு ஜோடியாக ‘வாரிசு’ படத்தில் நடித்திருந்தார். இப்போது, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் பூஜை இன்று போடப்பட்டு, அதன் பணிகள் இன்று தொடங்க இருக்கிறது.
இந்தப் படத்தின் கதை கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதுவரை கமர்ஷியல் படங்களில் பெரும்பாலும் நடித்து வந்த ராஷ்மிகா, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கக்கூடிய வகையில் கதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
இதனால், தமிழில் நடிகை நயன்தாரா எப்படி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வந்தாரோ அவரது வழியிலேயே ராஷ்மிகாவும் செல்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நயன்தாரா பெரிய மாற்றத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தினார் என சமீபத்தில் கீர்த்தி சுரேஷூம் தனது பாராட்டைத் தெரிவித்து இருந்தார். விரைவில், ராஷ்மிகா நடிக்கும் இந்தப் புதிய படத்தின் இயக்குநர், நடிகர்கள் மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
















