கிரிக்கெட்
ஐபிஎல் 2023: 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி!

ஐபிஎல் 2023 16 வது தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தது. இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களம் இறங்கினர்.
பஞ்சாப் கிங்ஸ் 191 ரன்கள்
அதிரடியில் விளையாடிய பிரம்சிம்ரன் சிங் 23 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களமிறங்கிய பனுகா ராஜபக்சே 30 பந்துகளில் அரைசதம் அடித்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை குவித்தது. இதனையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மத்துலா குர்பாஸ் மற்றும் மந்தீப் சிங் ஆகியோர் களம் இறங்கினர். இதில் மந்தீப் 2 ரன், அடுத்து வந்த அனுகுல் ராய் 4 ரன், குர்பாஸ் 22 ரன்கள் என அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனையடுத்து வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக இம்பேக்ட் பிளாயராக வெங்கடேஷ் அய்யர் களம் இறங்கினார்.
இவர் ஒருபுறம் பொறுமையாக விளையாட, மறுபுறம் இறங்கிய நிதிஷ் ராணா 24 ரன்கள், ரிங்கு சிங் 4 ரன்கள், ரஸல் 35 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். நிலைத்து நின்று விளையாடிய வெங்கடேஷ் அய்யரும் 34 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
பஞ்சாப் கிங்ஸ் வெற்றி
கொல்கத்தா 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தி வைக்க்கப்பட்டது. மழை நின்றதும் ஆட்டம் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், மழை நிற்காததால் ஆட்டம் முடிக்கப்பட்டது. டக் வொர்த் லீவிஸ் முறைப்படி கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 153 ரன்களை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அந்த அணி 146 ரன்களே எடுத்திருந்தது. இதனையடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.