கிரிக்கெட்
சென்னை அணிக்காக 200 சிக்சர்களை விளாசிய தோனி: ரசிகர்கள் உற்சாகம்!

2023 ஆம் ஆண்டுக்கான 16-வது ஐபிஎல் சீசன், அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் நேற்று கோலாகமாகத் தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை 178 ரன்களை குவித்தது. 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை எடுத்து, சென்னை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றியைப் பெற்றது.
200-வது சிக்சர்
குஜராத் அணிக்கு எதிரானப் போட்டியில், சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 7 பந்தில் ஒரு சிக்சர் உள்பட 14 ரன்களை எடுத்தார். தோனி அடித்த அந்த ஒரு சிக்சர் மூலம் அவர் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார். அந்த சிக்சர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி அடித்த 200-வது சிக்சராகும். அதேபோல், ஒரு ஐபிஎல் அணிக்காக அதிக சிக்சர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் தோனி 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஒரு அணிக்காக ஐபிஎல் போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களின் பட்டியல்:
கிறிஸ் கெயில் – 239 (பெங்களூரு)
ஏபி டிவில்லியர்ஸ் – 238 (பெங்களூரு
கைரன் போலார்டு – 223 (மும்பை)
விராட் கோலி – 218 (பெங்களூரு)
தோனி – 200 (சென்னை)
இந்தப் பட்டியலில் கோலி மற்றும் தோனி ஆகிய இருவர் மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். எஞ்சிய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.