கிரிக்கெட்
இந்திய வீரர்களுக்கு முன்கூட்டியே கொரோனா தடுப்பூசி? அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தும் பிசிசிஐ!

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு முன்கூட்டியே கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த பிசிசிஐ முயற்சி செய்துகொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ்க்கு பிறகு இந்தியாவில் கிரிக்கெட் காய்ச்சல் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அதன் பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்றனர். டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 என நீண்ட கிரிக்கெட் தொடராக இது நடைபெற்றது. இதில் டி20 மற்றும் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்தது. அந்த தொடரின் போது ஏற்பட்ட பல சர்ச்சைகளில் முக்கியமானது வீரர்களுக்கு விதிக்கப்பட்ட குவாரன்டைன் விதிமுறைகள். ஏற்கனவே இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா சென்று 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தான் அணியில் இணைந்தனர். ஆனால் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற பிரிஸ்பேன் நகருக்கு சென்ற பின் மீண்டும் சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டது. இதற்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்திருந்தால் ஆஸ்திரேலிய அரசு கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என கட்டாயப்படுத்தியது.
இந்த நிலையில் இப்போது இந்திய அணி ஆஸ்திரேலிய தொடருக்கு அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்காக வீரர்களுக்கு பயோ பபுள் விதிமுறைகளில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடரின் போது ரசிகர்களை அனுமதிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பாதுகாப்பு கருதி இத்தனை நாட்கள் ரசிகர்களுக்கு அனுமதி இல்லாமல் நடைபெற்றது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் சென்னையில் அணைத்து விதமான விளையாட்டு நிகழ்வுகளுக்கும் 50 சதவிகித ரசிகர்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு முன்கூட்டியே கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த அரசாங்கத்திடம் பிசிசிஐ தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கூறியுள்ள பிசிசிஐ பொருளாளர் அருண் துமல், இது கடினமானது தான் ஆனால் குறைந்த பட்சம் இந்த வழியில் நாங்கள் முயற்சி செய்கிறோம். எங்கள் வீரர்களுக்கு தடுப்பூசி போட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது. அரசாங்கத்தின் உத்தரவு படி, முன்கள பணியாளர்கள் மற்றும் அதிக ஆபத்து உள்ளவர்களுக்கே முதலில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் நாங்கள் எங்கள் வீரர்களுக்கு முன்கூட்டியே தடுப்பூசி செலுத்த அரசாங்கத்துடன் தொடர்பில் இருக்கிறோம் என்றார்.

ஒருவேளை அப்படி இந்திய வீரர்களுக்கு முன்கூட்டியே தடுப்பூசி வழங்கினால் அது தேவையில்லாத விவாதத்திற்கு வழி வகுக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இந்தியாவில் இதுவரை பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு மக்களுக்கு செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.இதை பல கட்டங்களாக மக்களுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி தற்போது முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், காவல்துறையினர் என 1 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.















