தமிழ்நாடு
அதிகரிக்கும் H3N2 வைரஸ் காய்ச்சல்… பள்ளிகளுக்கு விடுமுறை… புதுச்சேரி அரசு அதிரடி!

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட இந்தியா முழுமைக்கும் H3N2 வகை வைரஸ் காய்ச்சல் தொடர்ந்து பரவி வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரியில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

#image_title
H3N2 என்னும் இந்த ஃப்ளூ காய்ச்சல் கடந்த 2-3 மாதங்களாக இது பரவி வருகிறது. இது வைரஸ் என்பதால் ஆண்டிபயாடிக் இதற்கு எதிராக வேலை செய்யாது. அதே நேரம் இது கொரோனாவும் கிடையாது. இந்நிலையில் இந்த காய்ச்சல் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் தற்போது அதிக அளவில் பரவி வருகிறது.
தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் 2600-க்கு மேற்பட்டவர்களுக்கு H3N2 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல் புதுச்சேரியில் 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த பாதிப்புகளில் 18 பேர் 5 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள், மற்றொரு 18 பேர் 6 முதல் 15 வயது வரையிலான பள்ளி செல்லும் மாணவ மாணவிகள்.
இந்நிலையில், இன்று தொடங்கிய புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய கல்வி அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் அதிக அளவில் புதிய வைரஸ் தொற்று பரவி வருவதன் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை முதல் 26 ஆம் தேதிவரை 1 முதல் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக அறிவித்தார்.