தமிழ்நாடு
H3N2 காய்ச்சலுடன் மீண்டும் அதிகரிக்க தொடங்கும் கொரோனா: எச்சரிக்கும் சுகாதாரத்துறை!

தமிழகத்தில் H3N2 காய்ச்சல் பரவி வரும் சூழலில் இதனுடன் தற்போது கொரோனா பரவலும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

#image_title
H3N2 என்னும் இந்த ஃப்ளூ காய்ச்சல் கடந்த 2-3 மாதங்களாக பரவி வருகிறது. இது வைரஸ் என்பதால் ஆண்டிபயாடிக் இதற்கு எதிராக வேலை செய்யாது. அதே நேரம் இது கொரோனாவும் கிடையாது. இந்நிலையில் இந்த காய்ச்சல் தமிழகத்தில் தற்போது அதிக அளவில் பரவி வருகிறது.
H3N2 காய்ச்சல் வந்தால் 3 நாட்கள் வீட்டிலேயே இருந்தால் போதுமானது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும், மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் இன்று 1200 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இதனை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்துகள் கையிருப்பில் உள்ளன. காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் 3,4 நாட்கள் வீட்டில் தனிமையாக இருக்க வேண்டும். இருமும் போது மற்றவர்களுக்கு பரவமால் இருக்கவே இதனை அறிவுறுத்துகிறோம். தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்றவற்றை ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது என்றார்.
மேலும், சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்திய அளவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இது ஒமைக்ரான் வகை கொரோனா என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆர்டிபிசிஆர் சோதனையை அதிகரித்தால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். கடந்த மாதம் 2 என்ற எண்ணிக்கையில் கொரோனா பரவல் குறைந்தது தற்போது 20-25 என்ற அளவில் அதிகரித்துள்ளது என்றார் அமைச்சர்.