இந்தியா
மனிதர்களின் உளவியல் பக்கங்களை திகிலுடன் சொல்லும் ஹாலிவுட் திரைப்படம் “ சென்ட் ஹெல்ப்“

மனிதர்கள் அவரவர் குணத்தில் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள். பொதுவாகப் பார்க்கும்போது சிலர் ஒரே கருத்துடையவர்கள் போல் தெரிந்தாலும் ஆழமாக ஆராய்ந்தால் அணைவருக்குள்ளும் அவர்களது குணங்களின் பக்கங்களில் வேறுபாடுகள் மறைந்திருப்பதை அறிய முடியும். பதவியை தக்கவைக்க, பதவி உயர்வு பெற, உயர் அதிகாரியிடம் நல்ல பேர் வாங்க சூழ்ச்சி செய்தல், மற்றவரின் நற்பெயரைத் திருடுவது, மற்றவர்கள் மீது மலிவான மதிப்பீட்டினை வைப்பது மற்றும் சுயநலமாக நடந்து கொள்வது போன்ற குணங்கள் எல்லோரிடமும் பல்வேறு சமயங்களில் வெளிப்படுபவைதான்.
இவற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம்தான் “சென்ட் ஹெல்ப்“. அதன் இயக்குநர் சாம் ரைமி. அவர் ஈவில் டெட்,-3 பாகங்கள், ஸ்பைடர்மேன்-3 பாகங்கள், டார்க்மேன், ஏ சிம்பிள் பிளான், தி கிஃப்ட், ட்ரேக் மீ டூ ஹெல் ஆகிய பல முக்கியமான படங்களை இயக்கியிருக்கிறார்.
ஒரு நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றும் பெண்ணுக்கு அந்நிறுவன முதலாளி உயர் பதவி வழங்க நினைக்கிறார். ஆனால் விரைவிலேயே அந்த முதலாளி மரணிக்கிறார். தந்தையின் பணத்தில் எந்த சிரமமும் இல்லாமல் வளர்ந்த அவரது மகன் நிறுவன பொறுப்பை ஏற்கிறான். அவனோ நன்றாக பணிபுரியும் அந்த பெண்ணை உயர் பதவிக்கு அனுப்பி விட்டால் அவர் செய்யும் பணியை வேறு ஒருவர் சிறப்பாக செய்வாரா? அதனால் நிர்வாகம் பாதித்தால் என்ன செய்வது? என்று நினைத்தவன் தன் சகாக்களுடன் இணைந்து அந்த பெண்ணை ஒரு முட்டாளைப் போலவே நடத்த ஆரம்பிக்கிறான்.
அலுவலகக் குழுவினருடன் சுற்றுலாவாக பாங்காக் செல்லும்போது அடிமை போல் நடத்தும் அந்த பெண்ணையும் உ்டன் அழைத்துச் செல்கிறான். விமான பயணத்திலும் எல்லோரும் அந்த பெண்ணை தங்கள் வார்த்தைகளால் வதைக்கிறார்கள்.
அப்பொது திடீரென அவர்கள் சென்ற விமானம் விபத்தில் சிக்குகிறது. அந்த பெண் அந்த முதலாளி தவிர அணைவரும் அந்த விபத்தில் இறந்து விடுகின்றனர். இவர்கள் இருவர் மட்டும் ஒரு தனித்த தீவில் கரை சேர்கிறார்கள்.
இவ்வளவு நாளாக தனியாக இயங்கி பழக்கப்பட்டிராத எந்த ஒரு வேலையையும் தன்னிச்சையாக செய்யத் தெரியாத அந்த முதலாளி அந்த நிலையில் கலங்கிப் போகிறான். ஆனாலும் அந்த பெண்ணுக்கு தெரியக்கூடாது என்ற இறுமாப்பில் அவளை புழு போலவே நடத்த ஆரம்பிக்கிறான்.
ஆனால் எப்போதும் தனிமையில் இருந்தே பழக்கப்பட்ட அந்த பெண் போராட்ட வாழ்வை அறிந்தவள். அவளுக்கு வேட்டையாடத் தெரியும். இரவில் தங்குவதற்கு தென்னங்கீற்று கொண்டு கூரை வேயத் தெரியும்.. அடர்ந்த காடு கொண்ட தீவில் இருக்கும் மிருகங்களை எதிர்கொள்ளவும் தெரியும்.
இப்போது அந்த பெண்ணின் பார்வையில் அந்த முதலாளி ஒரு புழுவைப் போல தெரிகிறான்.
இவர்களுக்கு இடையிலான மன ரீதியிலான மோதலையும் அங்கிருந்து யார் முதலில் தப்பிப்பது என்ற போட்டி மனப்பான்மையும் வளர்கிறது. இதனால் அவர்கள் சிரமப்பட்டு சீரழிந்தார்களா? அல்லது ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு நட்போடு அங்கிருந்து தப்பித்தார்களா? என்பதுதான் இந்த படத்தின் சுவாரசியமான கதை.
அலவலகத்தில் பணியாற்றும் பெண்ணாக ரேச்சல் மேக் ஆடம்ஸ் மற்றும் இளம் முதலாளியாக டைலன் ஓ பிரையன் ஆகியோர் நடித்துள்ளனர்.
மனித உளவியலைப் படம் பேசினாலும் அதற்குள் திகில், வன்முறை, நகைச்சுவை கலந்த தன்னுடைய பாணியையும் புகுத்தியிருக்கிறார் இயக்குநர்.

